மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சமூக மட்டத்தில் அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குவதில் தாதியர்களின் பங்களிப்பு மிகவும் பிரதானமானது.
கல்முனை பிராந்தியத்தில் உள்ள தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார தாதிய சகோதரிகளுக்கு குறித்த விடயம் தொடர்பான, விசேட பயிற்சி செயலமர்வொன்று (08) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைய, பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் என்.அருந்திரன் இந்த செயலமர்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
உளநல வைத்திய நிபுணர் டொக்டர் வீ.சிந்துஜன் மற்றும் டொக்டர் எம்.ஜே.நௌபல் ஆகியோர், இந்நிகழ்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்டு
உளநல மருத்துவத்தில் நவீன அணுகுமுறைகள் மற்றும் தாதியர்களின் வகிபாகம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
பயிற்சி அமர்வில் முக்கியமாகப் பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
மனநல பாதிப்புக்குள்ளான நபர்களை சமூக மட்டத்தில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல்.
நோயாளிக்கான உளவியல் ரீதியான மற்றும் மருந்தியல் ரீதியான பராமரிப்பு முறைகள்.
மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளைப் பரிந்துரைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நடைமுறைகள்.
சிகிச்சை பெறும் நோயாளிகளின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மருந்துகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு வலியுறுத்துதல்.
சமூகத்தில் மனநலம் தொடர்பான களங்கத்தைத் தவிர்த்து, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த கௌரவமான சிகிச்சைகளை உறுதிப்படுத்துவதும், அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதும் தாதியர்களின் பொறுப்பு என்பதை வளவாளர்கள் சுட்டிக்காட்டியதுடன் குறித்த விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.






