• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வைத்தியசாலையின் புதிய பிரதான நுழைவாயில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைகளுக்காகவும், நோயாளர்களைப் பார்வையிடுவதற்காகவும் வந்து செல்லும் நிலையில், பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் நோயாளர்களை அவசரமாக ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தன.

இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக, முறையான திட்டமிடலுடன் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் தொகுதி தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வைத்தியசாலை வீதியில் ஏற்படும் வாகன நெரிசல் பெருமளவு குறைக்கப்படுவதுடன், அவசர சிகிச்சைப்பிரிவுக்கான உள்நுழைவுப் பாதையும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய நுழைவாயில் திறப்பு விழாவில் வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயில் முறைமையின் காரணமாக, நோயாளர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தடையின்றி உள்ளே சென்று வர முடிவதுடன், பொதுமக்களும் எவ்வித நெரிசலுமின்றி தமக்கான சுகாதார சேவைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share the Post: