• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு

மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்வின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக (29.08.2026) நேற்றையதினம் மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள், கலந்து கொண்டு தனது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணையில் இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன், திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், (Coalition for Inclusive Impact) நிறுவனப் பிரதிநிதிகள், வளவாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share the Post: