அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசரிச்சேனை பகுதியில் இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று மதியம் ஜும்ஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அறூஸ் ஹமூத் எனும் 9 வயதுடைய மாணவன், வீதியைக் கடந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மாணவனின் ஜனாஸா பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சோகமான சம்பவம் பொத்துவில் பிரதேச மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.








