• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழில் சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம்: தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு!

யாழில் சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம்: தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். தகுதியற்ற நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்டகாலமாகத் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகளுக்கு எவ்வித அனுபவமும் இல்லாத தகுதியற்ற நபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

“எமது உழைப்பைச் சுரண்டாதே!”, “தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கு!”, “அரசியல் தலையீடுகளை நிறுத்து!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களைத் ஏந்தியவாறு தொண்டர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகக் கூடிய போராட்டக்காரர்கள், தமக்குரிய நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டதுடன், பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Share the Post: