மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்நில எல்லைக் கிராமமான தோணிதாண்டமடுப் பகுதியில், நேற்றைய தினம் (06.09.2026) பிற்பகல் வேளையில் சில அதிகாரிகள் வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள், வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் இ.சிவேந்திரன் ஊடாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றனர்.
தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கள நிலவரங்களையும் கேட்டறிந்துகொண்டார்.
இதன்போது கிராம மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகி வருகிறோம். இதனால் இரவு வேளைகளில் கடும் அச்சத்திலேயே வாழ வேண்டியுள்ளது. இதற்கொரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் அச்ச நிலையைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசி, மக்களுக்கு சுமுகமான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.







