• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/10/ 23 ஆம் நாளான நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

ஹஸ்பர் ஏ எச்

மாண்புமிகு அவைத்தலைவர்  அவர்களே, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்ட மூலத்தின்  (Elimination of Rabies and Registration of Dogs Bill)  இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் எனது கருத்துகளை எடுத்துரைக்க விழைகின்றேன்.

வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவு தொடர்பான இலங்கையின் இன்றையச் சட்டக் கட்டமைப்பானது காலனித்துவக் காலத்தைச் சேர்ந்ததாகும். 1893ஆம் ஆண்டின் வெறிநாய்க்கடி கட்டளைச் சட்டமும், 1901 ஆம் ஆண்டின் நாய்கள் பதிவுச் சட்டமும் கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்.  அவை, காலங்கடந்த பொதுச் சுகாதார அணுகுமுறைகளைக் கொண்டுள்ளதோடு, இக்காலத்திற்குப் பொருந்தாத மிகக் குறைந்த தண்டத் தொகையையும் கொண்டுள்ளன.

மேலும், விலங்குகளைத் தன்னிச்சையாகக் கொல்லும் முறைகளையும் அவை அனுமதிக்கின்றன. இன்று கூட, நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களும் பொதுச் சுகாதார அதிகாரிகளும் ஒரு நூற்றாண்டு பழமையான சட்டங்களைக் கொண்டு விலங்கின நோய் அபாயங்களை நிருவகிப்பர் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

நாம் பேசும் இந்தச் சட்ட மூலமானது, சிதறிக் கிடக்கும் பழைய சட்டங்களை ஒரே சட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கிறது;  ஆண்டுதோறும் கட்டாயத் தடுப்பூசி மற்றும் பதிவை வலியுறுத்துகிறது.வணிக அடிப்படையிலான நாய் வளர்ப்பை முறைப்படுத்துகிறது. 

மேலும், தன்னிச்சையாக விலங்குகளைக் கொல்வதற்கு மாற்றாக மாந்தநேயம் மிக்க ‘பிடித்து கருத்தடை செய்து விடுவித்தல்’  முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் இலங்கையைப் புதிய பொதுச் சுகாதார நடைமுறைகளோடு இணைக்கின்றன. 2025ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் 14 பேர் வெறிநாய்க்கடியால் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சீர்திருத்தம் எவ்வளவு இன்றி அமையாதது என்பதை மேற்படித் தடுக்கத்தக்க மனித உயிரிழப்புகள் உணர்த்துகின்றன.

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இந்தச் சட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் பாராட்டுக்குரியவை என்றாலும், இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் பொழுது இதன் நடைமுறை உண்மைகளை நாம் முழுமையாக ஆராய வேண்டும்.

இதிலுள்ள மிக முதன்மையான அறைகூவலாக இருப்பது நான்காம் பிரிவைச் (Clause 4) சுற்றியுள்ள தொழில்முறை விவாதமாகும். வெறிநாய்க்கடி தடுப்பூசியை ஒரு பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் அல்லது அவரது நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே செலுத்த வேண்டும் என்று இப்பிரிவு கட்டளையிடுகிறது.

இலங்கைக் கால்நடை மருத்துவச் சங்கம், மாநில கால்நடை மருத்துவச் சங்கம் ஆகியன  முன்வைக்கும் தொழில்நுட்ப நியாயங்களை நாங்கள் மதிக்கிறோம். கால்நடை மருத்துவர்கள் சிறப்பு உயிரியல் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை,

அதே நேரத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் எழுப்பும் நடைமுறைசார் எச்சரிக்கைகளையும் நாம் செவிமடுக்க வேண்டும். 

இலங்கையில் முழுநேர அரச கால்நடை மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது; அவர்களில் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணை விலங்குத் துறைகளை நிருவகிப்பதிலேயே முனைப்பாக உள்ளனர்.

 பல பதிற்றாண்டுகளாக  நாட்டின் வெறிநாய்க்கடி ஒழிப்பு முயற்சிகள், 362 மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில்; சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார ஆய்வாளர்களின் (PHI) வழிகாட்டுதலின் கீழ் செயல்படும், பொதுச் சுகாதாரத் தடுப்பூசிப் பணியாளர்களை நம்பியே இருந்து வந்துள்ளன.

இந்தச் சட்ட முன்மொழிவின்  நான்காம் பிரிவு எந்த மாற்றமும் இல்லாமல் சட்டம் ஆக்கப்பட்டால், அது ஒரு பெரிய நிருவாக முடக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கால்நடை மருத்துவர்கள் அருகில் இல்லாத காரணத்தினால் சுகாதார மருத்துவ அலுவலகங்கள் (MOH) சமூக மட்டத்தில் தடுப்பூசி முகாங்களை நடத்த முடியாத நிலை ஏற்படும்.

2017–2018 ஆம் ஆண்டுகளில் வெறிநாய்க்கடி கட்டுப்பாட்டுப் பணிகள் கால்நடை த் திணைக்களத்துக்கு (DAPH) மாற்றப்பட்ட பொழுது ஏற்பட்ட விளைவை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த மாற்றத்தின் பொழுது, நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் தேசிய அளவிலான பாதுகாப்பானது  60  வீதத்தில் இருந்து ஆறு வீதமாகக் குறைந்தது. 

இதனால் பொதுச் சுகாதார நெருக்கடியைத் தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் மீண்டும் சுகாதார அமைச்சகத்திடமே அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டியதாயிற்று. அந்தத் தவறை நாம் மீண்டும் செய்ய முடியாது.

வெறிநாய்க்கடி பரவுவதைத் தடுக்க வேண்டுமெனில் நாய்களின் தொகையில் குறைந்தபட்சம் 70 வீதத்திற்கு தொடர்ச்சியான தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.

ஆகவே, குழு நிலை விவாதத்தின் பொழுது இதனோடு தொடர்புடைய அமைச்சர்  இதற்கானதொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை முன் வைக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அறுவை சிகிச்சை மூலமான கருத்தடை, வணிக அடிப்படையிலான இனப்பெருக்கம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கு கால்நடை மருத்துவர்களின் நேரடி மேற்பார்வை தொடரட்டும்.

அதேசமயம், வழக்கமான சமூக மட்டத்திலான தடுப்பூசி முகாங்களை சுகாதார மருத்துவ அதிகாரிகளின் (MOH) மேற்பார்வையின் கீழ்ப் பயிற்சி பெற்ற பொதுச் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து நடத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் சட்ட மூலத்தின் நான்காம் பிரிவில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, நாட்டின் உள்ளூராட்சி மன்றங்கள் மீது சுமத்தப்படும் நிதிச் சுமையையும் நாம் இவ்விடத்தில்  கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்தச் சட்டமூலமானது, மாநகராட்சி மன்றங்கள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றுக்குக் கருத்தடைத் திட்டங்களை நிருவகித்தல், விலங்குப் பராமரிப்பு நிலையங்களை நடத்துதல், வணிக வளர்ப்பாளர்களுக்கு உரிமம் வழங்குதல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாய்க் கணக்கெடுப்பு நடத்துதல் முதலிய கடமைகளை வழங்குகின்றது. 

இருப்பினும், இந்தக் கடமைகளைச் செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு எதையும் இந்தச் சட்ட மூலம்  வழங்கவில்லை. உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போதுமான நிதி உதவி வழங்காமல் இந்தச் சட்டக் கடமைகளை அவற்றின் மீது திணிப்பது, நிதி ஆதாரமற்ற நிலையை ஏற்படுத்திவிடும். 

இதன் காரணமாக பிரதேச சபைகளால் கருத்தடை மற்றும் தடுப்பூசித் திட்டங்களை முறையாகப் பராமரிக்க முடியாமல் போய்விடும். எனவே, நாடு முழுவதும் சீரான செயலாக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின், உள்ளூராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி வழங்கலுக்கு ஆதரவளிக்க ஒரு தனியான தேசிய வெறிநாய்க்கடி ஒழிப்பு நிதியத்தை (National Rabies Elimination Fund) நாடாளுமன்றம் உருவாக்க வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மீது ஏற்படும் சமூக-பொருளாதார தாக்கத்தையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். இந்தச் சட்ட மூலம் உரிய காலத்தில்  நாய்களைப் பதிவு செய்யத் தவறினால் 2,000 ரூபாய் தாமத தண்டப் பணத்தை விதிக்கிறது.

கிராமப்புற சமூகங்களில், ஏழை எளிய மக்கள் வீடுகளுக்குக் காவலாக இருக்கும் வளர்ப்பு நாய்களைப் பராமரித்து வருகின்றனர். பதிவுச் செயல்முறை செலவுமிக்கதாகவோ அல்லது அணுக முடியாததாகவோ இருந்தால்; தண்டப் பணத்தைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் நாய்களை வீதிகளில் கைவிட்டுவிடுவர்.

விலங்குகளைக் கைவிடுவது இந்தச்  சட்ட மூலத்தின் கீழ் குற்றம் ஆக்கப்பட்டிருந்தாலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அணுகக்கூடிய வகையில் இலவசப் பதிவு மற்றும் தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தாமல் அவர்களைத் தண்டிப்பது தெருநாய்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவே செய்யும். 

எனவே, சட்டம் நடைமுறைக்கு வரும் பொழுது முதல் ஆறு மாத காலத்திற்கு தண்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொடக்கப்  பதிவுக் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கவும் வேண்டும்.

இறுதியாக, 22 ஆம் பிரிவின் கீழ் உள்ள செயலாக்க அதிகாரங் களைப் பொறுத்தவரை; அதிகாரிகளுக்கு வளாகங்களுக்குச் செல்லும் அதிகாரம், வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்யும் அதிகாரம், உயிரியல் மாதிரிகளைச் சேகரிக்கும் அதிகாரம், சொத்துக்களைக் கைப்பற்றும் அதிகாரம் ஆகிய  அனைத்தும் தெளிவான வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கொள்ள வேண்டும். 

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, இந்த வெறிநாய்க்கடி ஒழிப்பு மற்றும் நாய்கள் பதிவுச் சட்ட மூலமானது ஓர் இன்றி அமையாத சட்டமாகும். இது காலத்துக்கு ஒவ்வாத  காலனித்துவச் சட்டங்களை மாற்றி, மனிதநேயமிக்க தெருநாய்கள் மேலாண்மையை அறிமுகப்படுத்தி, வெறிநாய்க்கடியை ஒழிப்பதற்கான கட்டமைப்புச் சூழலை வழங்குகிறது. 

இருப்பினும், இந்தச் சட்ட இலக்குகள் வெற்றிகரமாக எட்டப் படுவதை உறுதி செய்ய, குழு நிலை விவாதத்தின் பொழுது நாடாளுமன்றம் இதன் விதிகளைச் செம்மைப்படுத்த வேண்டும்.

நடைமுறைச் சாத்தியமான பொதுச் சுகாதார மாதிரியின் மூலம் 4ஆம் பிரிவில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான   நிதி ஆதரவை உறுதி செய்ய வேண்டும். 

இந்த இலக்கோடு கூடிய திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம், இலங்கையின் பொதுச் சுகாதாரத்தையும் விலங்கு நலனையும் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த சட்டத்தை இந்த நாடாளுமன்றத்தால் இயற்ற முடியும் எனக் கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன். 

Share the Post: