ஹஸ்பர் ஏ எச்
சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு, 2027ஆம் ஆண்டுக்கான பயிற்சிகளில் மாற்றுத்திறனாளி பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வு (23.10.2026) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட சமூக சேவைகள் திணைக்களம் மூலமான பயிற்சி சிறந்ததாகும் எனவும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் திறமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்தி, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் தமக்குப் பொருத்தமான தொழில்சார் பயிற்சிகளைப் பெற்று, சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் சமூகத்தில் சமவாய்ப்புகளுடன் பங்கேற்பதற்கும் வழிவகுக்கப்படுகின்றது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் இத்தகைய முயற்சிகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்குகின்றன.
இதில் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,திருகோணமலை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






