• Home
  • உள்ளூர் செய்திகள்
  • *திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி* 

*திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி* 

ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் துறையில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாள் பயிற்சி நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் பயிற்சி  (19.08.2026) நடைபெற்றது.

தேசிய முதியோர்களுக்கான செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த முதல் நாள் நிகழ்வை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம்.ஹேமந்தகுமார கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மேலும் இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ஜி.நவஜீவனா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வரும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துனை உத்தியோகத்தர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகிய அரச சேவை உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய வகையில் குறித்த மூன்று நாள் பயிற்சி இடம் பெற்றன.வளவாளர்களாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் திருமதி கௌரி வாசுதேவன்,கள இணைப்பாளர் வை.எம்.நிம்சாத், முதியோர்களுக்கான செயலகத்தின் சிரேஷ்ட உளவளத்துணையாளர் அஸ்ரின் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் குறித்த துறைசார் உத்தியோகத்தர்களின்  தொழில்சார் அறிவு, திறன் மற்றும் சேவை வழங்கும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சித் தொடரின் மூன்றாம் நாள் நிகழ்விலும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறிப்பாக, சமூகப் பணியாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளக்கூடிய சமூக மற்றும் உளவியல் சவால்கள், அவற்றை உரிய முறையில் அடையாளம் காணுதல், பயனாளிகளுடன் சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்துதல், அவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்து புரிந்துகொள்ளுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் பொருத்தமான உளவளத்துணை சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் இடம்பெற்றன.முதியோர்களுடனான கடமை மற்றும் தனிநபர் குழுக்கள் சமுதாயம் ஊடாக பணியாற்றும் போது தொழில்வாண்மை உறவுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.

மேலும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள், குடும்பங்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சமூக சேவைகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

பயிற்சியின் ஒரு பகுதியாக, நடைமுறைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல்கள், குழு செயற்பாடுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதுடன், சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் தமது கள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் குறித்தும் ஆராய்ந்தனர்.

இப்பயிற்சியானது சமூக சேவைகள் துறையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேலும் வலுப்படுத்துவதுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதும் தரமானதுமான சேவைகளை வழங்குவதற்கான திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறித்த துறைசார் உத்தியோகத்தர்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இம்மூன்று நாள் பயிற்சி நிகழ்ச்சி அமைந்துள்ளது.

Share the Post: