இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 28 பேருக்கான பயிற்சிநெறி (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிங்களமொழி மூலத்தில் 9 பேரும், தமிழ்மொழி மூலத்தில் 19 பேரும் என மொத்தம் 28 புதிய நியமனதாரர்களுக்காக இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.
இன்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி நடைபெறவுள்ளது.
இதன்போது உரையாற்றிய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு சேவைகளை வழங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் சார்பில் மக்களுக்குச் சேவையாற்றும் முக்கிய பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிறப்பு முதல் இறப்பு வரை மக்களின் பல்வேறு தேவைகளின் போது சேவையாற்ற வேண்டிய பொறுப்பு கிராம உத்தியோகத்தர்களுக்கு உள்ளதுடன், 24 மணிநேரமும் மக்களின் தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டிய கடப்பாடும் அவர்களுக்கு இருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தினார்.
15 நாட்கள் பயிற்சி நிறைவடைந்த பின்னர் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனைத் தொடர்ந்து தமக்குரிய பிரதேச செயலாளர் பிரிவில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் சுமார் இரண்டு மாதங்கள் நடைமுறைப் பயிற்சி வழங்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி, பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் புதிதாக நியமனம் பெற்ற கிராம உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.







