ஹஸ்பர் ஏ.எச்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகளுக்கு Jeyakumaran’s Global Foundation அமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான குமார் ஜெயக்குமரன் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (26) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாண வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயச் செல்வங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த வெற்றி, மாணவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் குழு ஒற்றுமைக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகும்.
அதேபோல், மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் மற்றும் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் துணைநின்ற பெற்றோர்கள் அனைவரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்களாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
கல்வியுடன் விளையாட்டுத் துறையிலும் சாதனை படைத்து தம்பலகாமம் மண்ணிற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களின் எதிர்காலப் பயணம் மேலும் பல வெற்றிகளால் சிறக்க எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய இந்த வெற்றி, நாளைய தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சாதனைகளுக்கான வலுவான அடித்தளமாக அமையட்டும்.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






