விவசாயிகளினால் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனப் திரவங்களின் வெற்றுக்கொள்கலன்களை முறையான வழியில் அகற்றிச் சூழலைப் பாதுகாக்கும் புதிய வேலைத்திட்டமொன்று காரைதீவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கீழ்க்கண்ட பகுதியில் நேற்று இந்த விழிப்புணர்வுச் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது விவசாயக் குழுவின் பிரதிநிதி இரா.திருநாவுக்கரசு உள்ளிட்ட பெருமளவிலான உள்ளூர் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.
விவசாய நிலங்களில் வீசப்படும் ஆபத்தான இரசாயனக் கொள்கலன்களால் ஏற்படும் சூழல் மாசடைதலைத் தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, கிருமிநாசினி வெற்றுக்கொள்கலன்களை முறையாக வகைப்படுத்தி அகற்றுவதற்காக மூன்று வெவ்வேறு நிறங்களிலான சேகரிப்புப் பெட்டிகள் விவசாய நிலப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- பச்சை நிறக் கொள்கலன்: பொலித்தீன் சார்ந்த கழிவுகளை இடுவதற்காக.
- சிவப்பு நிறக் கொள்கலன்: கண்ணாடி சார்ந்த கழிவுகளை இடுவதற்காக.
- நீல நிறக் கொள்கலன்: பிளாஸ்டிக் சார்ந்த கழிவுகளை இடுவதற்காக.
இந்தக் கொள்கலன்களில் முறையாகக் கழிவுகளை இடுவதன் மூலம், விவசாய நிலங்களையும் நிலத்தடி நீரையும் இரசாயனப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க முடியும் என அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்துடன், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
















