கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று ஞாயிற்றுக்கிழமை 5,000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆடிய பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு, புதிய உலக சாதனையாக அரங்கேறியுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற ‘சங்கமம் குளோபல் அகடமி’ (Sangamam Global Academy) மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ (Sangamith Liya Holidays) ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனைப் (Guinness World Record) பதிவை நோக்கமாகக் கொண்டே இந்த மாபெரும் நாட்டிய அஞ்சலி அரங்கேற்றப்பட்டது.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மற்றும் சர்வதேச ரீதியிலும் வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள், பாரம்பரிய உடைகளுடன் காலி முகத்திடல் மைதானத்தில் அணிவகுத்து நின்று ஒரே தாள லயத்துடன் ஆடிய நிருத்தியம், அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பக்திப் பரவசத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கடித்தது.
கடலோரத் தென்றல் வீச, கடலலைகளின் ஓசைக்கு மத்தியில் அரங்கேறிய இந்த பிரம்மாண்ட நிகழ்வானது இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலை மற்றும் கலாசார உறவை மேலும் பலப்படுத்தும் ஒரு பாலமாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நிகழ்வின் நிறைவில், சாதனை முயற்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ்களும், கௌரவங்களும் வழங்கி வைக்கப்பட்டன. கொழும்பு காலி முகத்திடல் வரலாற்றில் இத்தனை பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் ஒன்றிணைந்து பரதநாட்டியம் ஆடியமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.








