• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • தித்வா புயல் அனர்த்தம்: மூதூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீட்க 2.17 கோடி ரூபா நிதியுதவி வழங்கி வைப்பு!

தித்வா புயல் அனர்த்தம்: மூதூர் வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை மீட்க 2.17 கோடி ரூபா நிதியுதவி வழங்கி வைப்பு!

: ‘தித்வா’ புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மூதூர் பிரதேச வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் மீண்டும் தங்களது தொழில்களை ஆரம்பிப்பதற்காக, 2 கோடியே 17 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (13) சனிக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

இப்புயல் அனர்த்தத்தினால் கடுமையான நட்டங்களை எதிர்கொண்ட மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 381 வர்த்தகர்கள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் இந்த உதவித் திட்டத்தின் கீழ் பயனாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களது தொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவாக மொத்தம் 21,700,000 ரூபா நிதி இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் திரு. எம். ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ரொசான் அக்மீமன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளர்களுக்கான காசோலைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கி வைத்தார்.

புயல் பாதிப்பில் இருந்து வர்த்தகர்கள் மீண்டெழுந்து, பிரதேசத்தின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்த நிதியுதவி பெரும் பக்கபலமாக அமையும் என இதன்போது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்

இந்நிகழ்வில் மூதூர் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.எஃப். ரோஷனா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. முஜீப், தேசிய மக்கள் சக்தியின் (NPP) மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பாளர் முகம்மது சப்ரான் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share the Post: