சொகுசு மசாஜ் நிலையத்திற்குச் சென்ற கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரை நிர்வாணமாகக் காணொளி (Video) எடுத்து, 1 கோடி ரூபா கப்பம் கோரி மிரட்டிய குற்றச்சாட்டில் இளம் காதல் ஜோடி ஒன்று கொழும்பு தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரும், கண்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
வாட்ஸ்-அப்பில் வந்த மிரட்டல்:
பாதிக்கப்பட்ட வர்த்தகர் கொழும்பிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குச் சென்றிருந்த வேளையில், அங்கு பணியாற்றிய சந்தேகநபரான யுவதி, வர்த்தகருக்குத் தெரியாமல் அவரது நிர்வாணக் காட்சிகளைத் தனது கைபேசியில் இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சில நாட்களின் பின்னர் குறித்த காணொளிகளை வர்த்தகரின் வாட்ஸ்-அப் (WhatsApp) இலக்கத்திற்கு அனுப்பிய அந்த ஜோடி, “கேட்கும் பணத்தைத் தராவிட்டால், இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்குவோம். அத்துடன் உங்கள் வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வின் போது, உங்கள் மனைவியிடமே நேரடியாக ஒப்படைப்போம்” என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த வர்த்தகர், தனது குடும்ப மானத்திற்கும் தொழிலுக்கும் அவமரியாதை ஏற்படும் என்ற அச்சத்தில், முதற்கட்டமாக 1,50,000 ரூபாவை அந்த யுவதியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். எனினும், அந்த ஜோடி மீதிப் பணத்தைக் கோரி தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில், வர்த்தகர் இது குறித்து கொழும்பு தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவில் இரகசியப் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் சந்தேகநபர்களின் தொலைபேசி அழைப்புக்களைக் கண்காணித்து விசாரணைகளை முடுக்கிவிட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் தலாங்கம பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாகக் களமிறங்கிய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் குழுவினர், அந்த விடுதியைச் சுற்றிவளைத்து காதல் ஜோடியைக் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




