கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2026ம் ஆண்டுக்கான ஊடகத் துறையில் இளங்கலைஞர் விருதினை இளம் ஊடகவியலாளரான ஏ.எச்.ஹஸ்பர் பெற்றுக் கொண்டார்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (28)விருது வழங்கும் விழா இடம் பெற்றன.இதன் போது ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.மணிவண்ணன், மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேனகா புவிக்குமார்,மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவம் பாக்கியநாதன் ,மாநகர ஆணையாளர்,பிரதேச செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கிண்ணியாவை பிறப்பிடமாகவும் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவை வசிப்படமாகவும் கொண்ட இவர் 2013ல் ஊடகத் துறைக்குள் நுழைந்தார்.இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிராந்திய செய்தியாளராக நியமனம் பெற்று தற்போது அச்சு, இலத்திரனியல் ஊடகத் துறையில் (சுயாதீன ஊடக வலையமைப்பு,தினகரன்,தினக்குரல்,தமிழன்) மற்றும் டிஜிட்டல் செய்தி துறையிலும் சுதந்திர ஊடகவியலாளராக தற்போது வரை பணியாற்றி வருகிறார் . இந்தியா தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள Dr.MCRHRD ல் ஊடக முகாமைத்துவம் தொடர்பான குறுங்கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளதுடன் பல்வேறு கட்டுரைகளையும் தேசிய பத்திரிகைகள் மூலம் வெளிக்காட்டியுள்ளார். சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினராகவும் , திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் நிருவாக குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன் கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
இளம் ஊடகவியலாளரான இவர் கிண்ணியாவை சேர்ந்த அப்துல் அசன் அப்துல் ஹலீம் மற்றும் ஜெயினுதீன் சித்தி ஜரீனா ஆகிய தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார்.





