• Home
  • உள்ளூர் செய்திகள்
  • இலங்கை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வலுவூட்டல்: CEWET புலமைப்பரிசில் திட்டத்தை 700 மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் இந்திய உயர்ஸ்தானிகரகம்

இலங்கை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு வலுவூட்டல்: CEWET புலமைப்பரிசில் திட்டத்தை 700 மாணவர்களுக்கு விரிவுபடுத்தும் இந்திய உயர்ஸ்தானிகரகம்

ஹஸ்பர் ஏ ஹலீம் –

இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய உயர்ஸ்தானிரகம் சிலோன் எஸ்டேட் வேர்க்கர்ஸ் எஜுகேஷன் டிரஸ்ட் (CEWET) புலமைப்பரிசில் வழங்கும் விழாவை 2026 ஆகஸ்ட் 10ஆம் திகதி தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர், CEWET நிர்வாக சபை உறுப்பினர்கள், புலமைப்பரிசில் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர். CEWET நிறுவப்பட்டு 79 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 நிகழ்வின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் துணை ஜனாதிபதி மேன்மைதங்கிய திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது வெளியிட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட CEWET திட்டம் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், இந்திய அரசாங்கம் CEWET நிதியத்திற்கு ஒரு தடவையாக 200 மில்லியன் இந்திய ரூபாய் மேலதிக நிதி வழங்கியுள்ளது. இதன் மூலம் வருடாந்தம் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 350 இலிருந்து 700 ஆக இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதாந்த புலமைப்பரிசில் தொகையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்தர மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 2,500 மற்றும் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு ரூ. 7,500 வழங்கப்படுவதன் மூலம் பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த தகுதியான இளைஞர்களுக்கு முக்கியமான நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட நாடுகள் எனக் குறிப்பிட்டார். இந்திய வம்சாவளித் தமிழர் (IOT) சமூகம் இரு நாடுகளுக்குமிடையிலான உயிரோட்டமான பாலமாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அறிவு என்பது அழிக்க முடியாத சொத்து என்பதை வலியுறுத்திய அவர், ரூ. 75 கோடி பெறுமதியான இந்திய கல்வி உதவித் தொகுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு கல்வி ஆதரவுத் திட்டங்களையும் சுட்டிக்காட்டினார். இதன் கீழ் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு STEM பயிற்சி, 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், 9 பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் ஆகியவை இடம்பெறுகின்றன.

 பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சகோதரத்துவ உறவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் முனைப்பான அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதி அமைச்சர், கல்வியில் முதலீடு செய்வது நீண்டகால சமூக அபிவிருத்திக்கு அடித்தளமாக அமையும் எனத் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக நிலவிய பின்தங்கிய நிலைகளை கடந்து, தடைகளை உடைத்து, சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள கருவியாக கல்வி விளங்குகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, இலங்கை–இந்தியா கல்வி ஒத்துழைப்பின் நெருக்கமான உறவுக்கு மேலும் ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்த்துள்ளது. இதனுடன் ICCR புலமைப்பரிசில்கள், ITEC தொழில்முறைப் பயிற்சிகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட மனித வள மேம்பாட்டுக்கான பரந்தளவிலான இந்திய முயற்சிகளும் இணைந்துள்ளன.

Share the Post: