• Home
  • உள்ளூர் செய்திகள்
  • இன்றைய வானிலை: சில இடங்களில் மழை; 6 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை!

இன்றைய வானிலை: சில இடங்களில் மழை; 6 மாவட்டங்களுக்கு கடுமையான வெப்ப எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (15.07.2026) சிறியளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலையே நிலவும் எனவும் அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் ஆகியவற்றுடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் 6 மாவட்டங்களுக்கான கடுமையான வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பின்வரும் மாவட்டங்கள் அதிக வெப்பத் தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும் என அடையாளம் காணப்பட்டுள்ளன:

  • முல்லைத்தீவு
  • வவுனியா
  • மட்டக்களப்பு
  • அம்பாறை
  • திருகோணமலை
  • மொனராகலை

குறித்த மாவட்டங்களில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் (Heat Index) — அதாவது மனித உடலால் நேரடியாக உணரப்படும் வெப்பநிலை — ‘அவதானம் செலுத்த வேண்டிய’ (Caution) மட்டத்தில் காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்: அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், நீண்ட நேரம் நேரடி வெயிலில் தங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share the Post: