கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி கும்பாபிசேக குடமுழுக்கு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி; காரியசித்தி கணபதி ஆராதனை கிரியைகள் ஆம்பமானதுடன்; மாலை பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய யானை ஊர்வலம் இடம்பெற்றது.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் கலை கலாசார பாரம்பரிய நாட்டிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நேற்று 12ஆம் திகதி அம்மனுக்கான தூபிக்கலசம் நிர்ணயமும் பிரம்ம முகுர்த்த வேளையில் அம்மனுக்கான யந்திர பிரதிஷ்டையும் அம்மன் பிரதிஷ்டையும் அடையல் பிரதிஷ்டையும் பரிவார தெய்வங்களுக்கான யந்திரப்பிரதிஷ்டை உள்ளிட்ட கிரியைகளும் இடம்பெற்றது.
இன்று காலை 8.00 மணி முதல் விசேட யாகபூஜைகள் இடம்பெற்று, முற்பகல் 10.45 மணியளவில் சுபமுகூர்த்த வேளையில் கலச குடமுழுக்கு கும்பம் எடுத்துச் செல்லப்பட்டு கலசாபிசேகம் இடம்பெற்றது.
தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மகா குடமுழுக்கும், அதனைத் தொடர்ந்து அம்மன் பரிவாரத் தெய்வங்களுக்கான நன்னீராட்டுதலும் அம்மனுக்கான சுமங்கலி பட்டாம்பிகை திருக்கோல அலங்கார தரிசனமும் நடைபெற்றது.
இக்கிரியைகளை பிரதிஷ்டா பிரதம குருமணி விஷ்வபிரம்மஸ்ரீ சற்குணராசா குருக்கள் தலைமையில், ஆலய குரு விஷ்வபிரம்மஸ்ரீ தினேஸ் காந்தன் ஜயா மற்றும் ஆலய உற்சவகால குரு விஷ்வபிரம்மஸ்ரீ செ.நிறேகன் ஜயா உதவி குரு சிவஸ்ரீ. கனியவன் ஜயா மற்றும் சிவாச்சாரியார்கள் முன்னெடுத்தனர்.
குடமுழுக்கு பெருவிழாவைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 12 நாட்களுக்கு விசேட மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ளது.





