மீகொடை பகுதியில் தானசாலை (தன்சல) ஒன்றில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதி ஏழு பேர் உயிரிழந்த சம்பவத்தில், 42 வயதுடைய சாரதிக்கு எதிராக ‘கொலைச் சதி’ உள்ளிட்ட அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்த இலங்கை காவல்துறை தீர்மானித்துள்ளது.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தியது மாத்திரமன்றி, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் (License) இன்றியும், காலாவதியான ஆவணங்களைக் கொண்ட வாகனத்திலும் குறித்த நபர் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தானசாலை ஒன்றில் மக்கள் உணவைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த சந்தேகநபர், முன்னால் சென்ற வாகனத்தை மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மக்கள் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்தது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சாரதி, காயமடைந்தவர்களைக் காப்பாற்ற முனையாமல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.
எனினும், பொலிஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர் கோடகம பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார். பொறுப்பற்ற விதமாக வாகனத்தைச் செலுத்திப் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதால், அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.




