• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இலங்கையின் 40 சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கான இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

இலங்கையின் 40 சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கான இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

ஹஸ்பர் ஏ ஹலீம் –

இலங்கையைச் சேர்ந்த 40 சிவில் சேவை உத்தியோகத்தர்கள், “அனர்த்த முகாமைத்துவம்” தொடர்பான விரிவான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ்ச்சியில் இந்தியாவின் நல்லாட்சி தேசிய நிலையத்தில் (NCGG) கலந்துகொண்டனர். இப்பயிற்சி நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி நிறைவடைந்தது.

“அனர்த்த முகாமைத்துவம்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட ஐந்தாவது சிறப்புப் பயிற்சியான இந்நிகழ்ச்சி, அனர்த்த முன்னாயத்தம், அவசரகாலப் பதிலளிப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய திறனை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை சிவில் சேவை உத்தியோகத்தர்களின் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இப்பயிற்சியில் அனர்த்த முன்னாயத்தம் மற்றும் தணிப்பு உத்திகள், அனர்த்த முகாமைத்துவத் திட்டமிடல் மற்றும் கொள்கைகள், அவசரகாலப் பதிலளிப்பு பொறிமுறைகள் மற்றும் கள நடவடிக்கைகள், முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள், நகர்ப்புற மற்றும் உள்ளூர் மட்டங்களில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறன், அனர்த்தங்களை நிர்வகிப்பதற்கான அரச நிறுவனங்களின் திறனை மேம்படுத்துதல், அத்துடன் அனர்த்த அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பை (Sendai Framework for Disaster Risk Reduction) நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள், தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை (NDMA), தேசிய அனர்த்த மீட்புப் படை (NDRF), உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் உத்தரகாண்ட் மாநில அனர்த்த மீட்புப் படை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கும் கள விஜயங்களை மேற்கொண்டனர்.

இத்திட்டமானது, 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி மேதகு அநுர குமார திஸாநாயக்க அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறை விஜயத்தின்போது, இந்தியாவின் நல்லாட்சி தேசிய நிலையம் (NCGG) மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) ஆகியவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் 1,500 இலங்கை சிவில் சேவை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பில் திறன் மேம்பாடு முக்கிய தூணாக விளங்குகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறை விஜயத்தின்போது, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் மேலும் 700 சிறப்புத் தன்மையுடைய பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் பயனாக ஆண்டுதோறும் 1,000 இலங்கையர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Share the Post: