பெந்தோட்டை சுற்றுலா வலயத்தில் நேற்றைய தினம் (ஜூலை 29) மாலையில் இடம்பெற்ற பாராமோட்டர் (Paramotor) சிறிய ரக விமான விபத்தில் 31 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த இந்த வான்வழிப் பயணத்தின் போதே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை வேளையில், வானில் பறந்து கரையோர அழகை ரசிப்பதற்காகக் குறித்த சிறிய ரக பாராமோட்டர் விமானம் இயக்கப்பட்டது.
கரையிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விமானம் கடலில் வீழ்ந்த கணத்தில், அதனைச் செலுத்திய கொலம்பியா நாட்டைச் சேர்ந்த விமானி தப்பித்து நீந்தி கரை சேர்ந்து உயிர்தப்பியுள்ளார். இருப்பினும், அதில் பயணஞ் செய்த 31 வயதுடைய வெளிநாட்டுப் பெண் விமானத்திற்குள்ளேயே சிக்கி, ஆழ்கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த கடற்படையினரும் மீட்புக் குழுவினரும் கடலில் மூழ்கிய பெண்ணின் சடலத்தைக் மீட்டெடுத்துள்ளனர். சடலம் தற்போது நாகொட வைத்தியசாலையின் சவக்காலையில் வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது மனிதத் தவறா என்பது குறித்துப் பெந்தோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(குறிப்பு: பொலிஸாரின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி உயிரிழந்த பெண் பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது).




