18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா, இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி கௌரவித்தார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் இவ்விளையாட்டு விழாவில் பங்கேற்று, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் வீர வீராங்கனைகள் ஆர்வத்துடனும் போட்டி உணர்வுடனும் பங்கேற்றதுடன், வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத் துறையின் ஆற்றலையும் வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் ஒட்டுமொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், வவுனியா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், மன்னார் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் க. ஏகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், விளையாட்டு வீர வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share the Post:

Related Posts