• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு!

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு!

புங்குடுதீவு உலக மையத்தின் ஏற்பாட்டில், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் அவசரத் தேவைக்காக அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திருமதி நளாயினி அருள்பாலா அவர்களின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உடன்பிறப்புக்களான பாஸ்கரன், கிருபாயினி மற்றும் சண்முகாயினி ஆகியோரின் முழுமையான நிதியுதவியுடன் இப்பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் விடுத்திருந்த அவசர வேண்டுகோளுக்கிணங்க, வைத்தியசாலையின் அத்தியாவசிய உபயோகத்திற்காக உடனடியாகத் தேவைப்பட்டிருந்த ஒரு சக்கரநாற்காலி (Wheel Chair) மற்றும் நோயாளர் தள்ளுவண்டியாகவும் பயன்படுத்தக்கூடிய ஒரு பரிசோதனை படுக்கை (Patient Trolley & Examination bed) என்பன இவ்வாறு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இவ்வுபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை மருத்துவர் பர்ஷாத், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பூராசா அன்பரசி மற்றும் புங்குடுதீவு உலக மையத்தின் செயலாளரும், வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவருமான கருணாகரன் குணாளன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அமரர் நளாயினி அருள்பாலா அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், புங்குடுதீவு கிராமத்தில் மாத்திரமன்றி, தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சமூகநல மற்றும் தொண்டுப் பணிகளை முன்னெடுத்திருந்த ஒரு சமூகப்பற்றாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Share the Post:

Related Posts