வவுனியாவில் அதிர்ச்சி: நடத்துனர் இன்றி பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பேருந்து!

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்து ஒன்று, நடத்துனர் (கொண்டக்டர்) இல்லாமலேயே பயணிகளுடன் ஆபத்தான முறையில் பயணித்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.30 மணியளவில் செட்டிக்குளம் நோக்கிப் பயணிப்பதற்காக இ.போ.ச பேருந்து ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்பேருந்து வீரபுரம் வீதி ஊடாகச் சென்றுகொண்டிருந்த போது, அதில் கடமையில் இருந்த நடத்துனர் கடுமையான மதுபோதையில் இருப்பதாக, பேருந்திலிருந்த பயணிகள் தரப்பிலிருந்து செட்டிக்குளம் பிரதேச சபையின் உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசாவுக்குத் தொலைபேசி ஊடாக அவசர முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உப தவிசாளர் சிவானந்தராசாவின் தலையீட்டுடன், செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸாரின் உதவியோடு குறித்த பேருந்து மறிக்கப்பட்டு அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, பேருந்தினுள் நடத்துனர் எவரும் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் கண்டறியப்பட்டது. இது குறித்து பேருந்தின் சாரதியிடம் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் வினவியபோது, “நடத்துனர் தனது தனிப்பட்ட காரணத்திற்காக வழியிலேயே பேருந்தை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார்” என அவர் பதிலளித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அரச போக்குவரத்துச் சபையின் (SLTB) விதிகளின்படி, நடத்துனர் இன்றி பயணிகள் பேருந்து ஒன்றை வீதியில் இயக்குவது முற்றிலும் சட்டத்திற்கு முரணானதும், கடுமையான விபத்து அபாயத்தை தோற்றுவிக்கக்கூடியதுமான செயலாகும்.

இவ்வாறானதொரு பொறுப்பற்ற சம்பவம் பகிரங்கமாக இடம்பெற்ற போதிலும், இதுவரை சம்பந்தப்பட்ட நடத்துனர் அல்லது சாரதிக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் அல்லது துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் பயணிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share the Post:

Related Posts