மாத்தளையில் இன்று காலை இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில், தனது பேத்தியை பாலர் பாடசாலைக்கு (Pre-school) அழைத்துச் சென்ற வயோதிபர் ஒருவர் லொறி சில்லில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது:
மாத்தளை இராஜ வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. கொழும்பு நோக்கி பயணித்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உக்குவளை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயது மதிக்கத்தக்க தாத்தாவே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பேத்திக்கு நேர்ந்த கதி
உக்குவளையில் இருந்து மாத்தளையில் உள்ள பாலர் பாடசாலைக்கு தனது பேத்தியை தாத்தா அழைத்துச் சென்ற போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது தூக்கி வீசப்பட்ட சிறுமி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார். அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட சிறுமி, உடனடியாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் லொறியின் சாரதியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




