• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள்; பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க கல்வி அமைச்சு விசேட அதிரடி உத்தரவு!

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அடுத்த வாரத்திற்குள்; பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க கல்வி அமைச்சு விசேட அதிரடி உத்தரவு!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வார இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே சூரியன் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பெறுபேறுகளை முறைப்படி இற்றைப்படுத்தும் (Update) இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திட்டமிட்டபடி அடுத்த வார நிறைவுக்குள் பெறுபேறுகளை உத்தியோகபூர்வமாக வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பாடத்திட்டங்களை முடிக்க கல்வி அமைச்சு விசேட கட்டளை
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் (A/L) பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் கற்பித்து முடிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு அவசர அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

மேலதிக வகுப்புகள் மூலம் பாடத்திட்டங்களை முடியுங்கள்:
ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்பட்டால், முறையான திட்டமிடல் மூலமாகவோ அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை (Extra Classes) ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பரீட்சை திகதிகளில் மாற்றமில்லை: கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் திட்டவட்டமாக நடத்தப்படும்.

மாணவர்களின் தயார்படுத்தல்: மாணவர்கள் எவ்வித பின்னடைவும் இன்றி பரீட்சைகளுக்கு தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் வலியுறுத்தியுள்ளார்.

Share the Post: