• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • முதியோர் கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு; இனி ‘அஸ்வெசும’ ஊடாக மட்டுமே கிடைக்கும்: அரசாங்கம் அதிரடி முடிவு!

முதியோர் கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு; இனி ‘அஸ்வெசும’ ஊடாக மட்டுமே கிடைக்கும்: அரசாங்கம் அதிரடி முடிவு!

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை (நாளை) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அஞ்சல் நிலையங்கள் (Post Offices) ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

அனைத்து முதியோர்களையும் உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் (Database) உள்வாங்கி, இனிவரும் காலங்களில் ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக மட்டுமே கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

தற்போது முதியோர் கொடுப்பனவுகள் இரண்டு வெவ்வேறு முறைகளின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1. அஸ்வெசும வங்கி கணக்குகள் வழி: நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து ஏற்கனவே அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வெசும வங்கி கணக்குகள் ஊடாகவே நேரடியாகக் கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன. அதன்படி அவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் கடந்த மே மாதம் 29ஆம் திகதியே வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுவிட்டன.

2. அஞ்சல் நிலையங்கள் வழி (நாளை முதல்): அஸ்வெசும கணக்குகள் இன்னும் இல்லாத அல்லது வங்கிக் கணக்குகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுவதன் காரணமாகக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு மட்டுமே, அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகக் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படவுள்ளன.

எனவே, அஞ்சல் நிலையங்கள் மூலம் கொடுப்பனவு பெறுவோர் தங்களது கொடுப்பனவுகளை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிதும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share the Post: