• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • ‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு!

‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு!

‘திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர்.

இந்த விசேட சந்திப்பு கடந்த ஜூன் 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் இடம்பெற்றது.

“திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி – ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய செயற்பாடுகளை அடுத்தகட்டமாக எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் ஆராயப்பட்டது.

பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளின் ஆரம்பக் கட்டத்தில் எட்டப்பட்ட முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவது குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடின.

மாணவர்களின் இடைவிடாத கல்வியை உறுதிசெய்தல், பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உளவியல் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இதுதொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் முக்கிய உடன்பாடுகளுக்கு வந்தனர்.

இச்சந்திப்பில் யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), யுனிசெப் பிரதிநிதி பெகோனா அரேலனோ (Begona Arellano) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: