மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை புனித பவுலின் ஆலய அடிகளார் மற்றும் நிர்வாகிகளின் விசேட அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் நேற்று (12.07.2026) விசேட விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆன்மீக ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
மரியாதை நிமிர்த்தமான இச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
குறிப்பாக, தற்போதைய சூழலில் மதங்களுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்துவதன் அவசியம் குறித்தும், ஆலயத்தின் பொதுவான அபிவிருத்திகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, இவ் ஆலயத்தின் கீழ் இயங்கி வரும் பாலர் பாடசாலையின் அபிவிருத்தி, கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்புக்களை மேம்படுத்தல் மற்றும் குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் சம்பளப் பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, சாதகமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.நாகேந்திரன், சமூக ஆர்வலர் எம்.உமாசேகரம், ஆலய நிர்வாகிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







