• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வந்தாறுமூலையில் தமிழர் கலாசார விழுமியங்களை பறைசாற்றி கோலாகலமாக நடைபெற்ற ‘டைமன்’ கழகத்தின் கிராமிய விளையாட்டு விழா!

வந்தாறுமூலையில் தமிழர் கலாசார விழுமியங்களை பறைசாற்றி கோலாகலமாக நடைபெற்ற ‘டைமன்’ கழகத்தின் கிராமிய விளையாட்டு விழா!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து நடத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா, இன்று (06) பிற்பகல் 3.00 மணியளவில் வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கழகத் தலைவர் திரு. ம. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, தமிழர் பாரம்பரிய கலாசார விழுமியங்களைப் பறைசாற்றும் வகையில் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பான்ட் வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் கழகக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிராமிய மணம் கமழும் வகையில் அமைந்த இப்போட்டித் தொடரில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழும் வண்ணமாக மிட்டாய் ஓட்டம், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், சாப்பாட்டு ராமன், கயிறு இழுத்தல், நிற முட்டி உடைத்தல், தலையணைச் சமர் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. இதில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் நிறைவில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்விழாவில் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு. வி. அனுஷகுமார் ஆகியோரும், சிறப்பு அதிதியாக மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு. த. கிஸ்ணகாந் ஆகியோருடன் பிரஜாசக்தி தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Share the Post:

Related Posts