வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு – திமிலைதீவு திருத்தலத்தில் எழுந்தருளி, திசையெங்கும் தன் அருள்புகழைப் பரப்பிவரும் திவ்யரூப மஹா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா பக்திப் பெருக்குடன் ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.
இதன் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆலயத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று (06) மாலை மிக ஆன்மீக அதிர்வுகளுடன், சிறப்பான முறையில் அரங்கேறியது. தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டும் எம்பெருமானின் லீலைகளில் ஒன்றான “பூதகி வதம்” நிகழ்வு விழாவின் முக்கிய அம்சமாக பக்திப் பூர்வமாக நடத்தப்பட்டது.
திவ்யரூபமாய், அலங்கார சொரூபியாய் எழுந்தருளிய எம்பெருமான் மஹா விஷ்ணு, பூதகி வதக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதன்போது திரண்டிருந்த நூற்றுக்கணக்கான அடியார்கள் “அரோகரா” கோஷங்களை எழுப்பி, நெஞ்சுருக இறைவனை வழிப்பட்டனர். பிராந்தியத்தின் நாலாதிசைகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்களின் பக்திப் பெருக்குடன் இரண்டாம் நாள் திருவிழாச் சடங்குகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நிறைவுற்றன.











