• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஜூலை 3 முதல் பேருந்து கட்டண திருத்தம்? கெமுனு விஜேரத்ன வெளியிட்ட முக்கிய தகவல்!

ஜூலை 3 முதல் பேருந்து கட்டண திருத்தம்? கெமுனு விஜேரத்ன வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டண மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் ஏனைய பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“டீசல் விலை குறைந்தாலும் கட்டணம் குறையாது”
எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தங்களின் போது டீசல் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அடுத்த 6 மாதங்களுக்கு பேருந்து கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என கெமுனு விஜேரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, ஜூன் மாத ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சுமார் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான இறுதித்தீர்மானம், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடனும் விரிவாகக் கலந்துரையாடிய பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share the Post: