• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது-பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது-பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித் தொடரின் கிழக்கு மாகாண நிகழ்வு நேற்று (09) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு   பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதி அமைச்சர், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்காக இளைஞர் சமூகம் கல்வி மற்றும் தொழில்துறை ரீதியாக உயர்ந்த நிலையை அடைவது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது தேசிய ஒற்றுமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நிர்ப்பந்திக்கப்படும் நிலை உருவாகக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது தேசிய இளைஞர் கொள்கையின் பின்னணி, அதன் அவசியம், கொள்கை உருவாக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதன் காலவரையறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் இளைஞர் விவகாரங்களுக்கான உதவிப் பணிப்பாளர் நிமேஷ் சிவங்கர அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக QR குறியீட்டின் ஊடாகப் படிவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜே. ஸ்ரீபதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி பாஹிர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பெருமளவில் இந்நிகழ்வில் பங்கேற்று தமது கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

Share the Post: