மட்டக்களப்பு கிரான்குளம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தோணி ஒன்று பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவர் துரைராஜா முத்தையா மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை சுமார் 11.00 மணியளவில், குறித்த கடற்பகுதியில் மூன்று மீனவர்கள் தோணியில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையில் தோணி சிக்கி கவிழ்ந்துள்ளது.
இதையடுத்து மூவரும் கடலில் மூழ்கிய நிலையில், 45 வயதுடைய செல்வகுமார் என்பவர் நீந்தி கரையை வந்தடைந்துள்ளார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அமரசிங்கம் பரமலிங்கத்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவரான துரைராஜா முத்தையா காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவரை தேடும் பணியில் மீனவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடற்பகுதிகளில் காணப்படும் கடுமையான அலை மற்றும் வானிலை நிலைமைகளை கருத்திற்கொண்டு, மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




