ஹஸ்பர் ஏ எச்-
“இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாக்க விளையாட்டே சிறந்த பாதை” – குமார் ஜெயகுமரன்
ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி 2026 இன் பிரதான அனுசரணையாளர் குமார் ஜெயகுமரன்
திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான ‘ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி’ கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நேற்றைய (28)தினம் சிறப்பாக நடைபெற்றது.
இத்தொடரின் பிரதான அனுசரணையாளராக Jeyakumaran’s Global Foundation இன் தலைவர் திரு. குமார் ஜெயகுமரன் BSc (Hons), MBA அவர்கள் செயற்பட்டிருந்தார்.

இறுதிப்போட்டியில் இராள்குழி ஸ்ரீ கஜமுக விளையாட்டுக் கழகமும், சேனையூர் ஸ்ரீ கணேசா விளையாட்டுக் கழகமும் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சேனையூர் ஸ்ரீ கணேசா அணி, 33 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து 139 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இராள்குழி ஸ்ரீ கஜமுக அணி, 17 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன் மூலம் சேனையூர் ஸ்ரீ கணேசா விளையாட்டுக் கழகம் ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி 2026 இன் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட திரு. குமார் ஜெயகுமரன் BSc (Hons), MBA, Chairman – Jeyakumaran’s Global Foundation மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர், வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் பாராட்டினார்.

அவர் உரையாற்றுகையில்:
“எமது அடுத்த தலைமுறை போதைப்பொருள் பாவனையிலிருந்தும் வன்முறையிலிருந்தும் முற்றாக விலகி, ஆரோக்கியமான மற்றும் பொறுப்பான வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று விளையாட்டாகும்.”
“திருகோணமலை மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு என்னால் முடிந்த அனைத்து வகையான ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன். எமது இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும் திறமையையும் விளையாட்டில் பயன்படுத்தி, தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற சேனையூர் ஸ்ரீ கணேசா விளையாட்டுக் கழகத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த குமார் ஜெயகுமரன், இறுதிப்போட்டியில் வெற்றியைத் தவறவிட்ட இராள்குழி ஸ்ரீ கஜமுக விளையாட்டுக் கழக வீரர்கள் மனம் தளர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
“இன்று வெற்றி பெறவில்லை என்பதற்காக நீங்கள் ஏமாற்றமடைய வேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்து, உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொண்டு முயற்சி செய்யுங்கள். எதிர்வரும் போட்டிகளில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். தோல்வி என்பது முடிவல்ல; அது அடுத்த வெற்றிக்கான அனுபவமாகும்.”
மேலும், இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளின் ஊடாக சிறந்த விளையாட்டு வீரர்களை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல தலைவர்களையும் உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த இளைஞர்களில் இருந்து நாளைய சமூகத்தின் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். தலைமைத்துவம், ஒழுக்கம், ஒற்றுமை, பொறுப்பு மற்றும் சமூக அக்கறை ஆகிய பண்புகளை விளையாட்டு வளர்க்கிறது. எனவே, எமது இளைஞர்களை விளையாட்டின் ஊடாக வலுப்படுத்துவதற்கு நான் தொடர்ந்து பங்களிப்பேன்.”

இளைஞர்களை போதைப்பொருள் பாவனை, வன்முறை மற்றும் தவறான வழிகளில் இருந்து விலக்கி, விளையாட்டு, கல்வி, தொழில் மற்றும் சமூகப் பணிகளின் ஊடாக அவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, ஸ்ரீ கணேசா சம்பியன் ட்ரொபி 2026 தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள், விளையாட்டுக் கழகங்கள், வீரர்கள், நடுவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.




