மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை 7.00 மணியளவில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் நடைபெற்ற இந்நிழழ்வில், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இணைந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவர்களினால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களின் உரையும் இடம்பெற்றது.
இப்பள்ளிவாயல் கட்டடத்தை முழுமையாக நிர்மாணித்துக் கொடுக்கும் ‘பெஷன் ஹவுஸ்’ நிறுவனத்தின் ஸ்தாபகர் மர்ஹும் எஸ்.எச்.எம்.நஜீம் அவர்களின் குடும்பத்தினர் சார்பில், கட்டுமானப் பணிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவு இதன்போது ஒப்பந்தகாரரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாரூன் (றஷாதி), செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிர் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஹாபிழ் (ஜமாலி) மற்றும் பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் எம்.எல்.ஆதம்பாவா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மர்ஹும் நஜீம் அவர்களின் குடும்பத்தினர் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
புதிய கட்டடப் பணிகள் சிறந்த முறையில் நிறைவடைந்து, இப்பிரதேச மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் மையமாக இப் பள்ளிவாசல் திகழ வேண்டி, காத்தான்குடி ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் ஆயுட்கால பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெயினுதீன் (மதனி) அவர்களினால் விசேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இவ்விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் பள்ளிவாயலின் செயலாளரும், காத்தான்குடி நகர சபையின் அன்வர் வட்டார உறுப்பினருமான எம்.எச்.எம்.ரிஸ்வி நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








