இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரின் 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கடவுச்சீட்டு (Passport) உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை, ருவன்வெல்ல பொலிஸார் சில மணித்தியாலங்களுக்குள் அதிரடியாக மீட்டு ஒப்படைத்துள்ளனர்.
ஈராக் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கேகாலை – ருவன்வெல்ல பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தனது பணப்பையை தவறவிட்டுள்ளார். அந்தப் பணப்பையினுள் 10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம், சர்வதேச கடவுச்சீட்டு மற்றும் பல முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.
பணப்பை காணாமல் போனதால் செய்வதறியாது திகைத்த அந்தப் பயணி, இது குறித்து உடனடியாக ருவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து, ருவன்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் உடனடியாக விசாரணைக் களத்தில் குதித்தனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தும், தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் சில மணித்தியாலங்களுக்குள் தொலைந்த பணப்பையை பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.
அதனையடுத்து, பணப்பையில் இருந்த 10 இலட்சம் ரூபாய் பணம், பாஸ்போர்ட் மற்றும் அனைத்து ஆவணங்களும் எவ்வித சேதமுமின்றி அந்த ஈராக் நாட்டுப் பயணியிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
தக்க சமயத்தில் துரிதமாகச் செயற்பட்டு, நாட்டின் கௌரவத்தையும் இலங்கை பொலிஸாரின் நம்பிக்கையையும் சர்வதேச ரீதியில் உயர்த்திய ருவன்வெல்ல பொலிஸாரின் இந்த நேர்மையான நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.




