• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • காரைதீவில் மூடியற்ற ஆபத்தான வடிகான்கள்: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்; வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

காரைதீவில் மூடியற்ற ஆபத்தான வடிகான்கள்: விபத்து அச்சத்தில் பொதுமக்கள்; வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேசத்தின் பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகளிலுள்ள வடிகான்கள் பல வருடங்களாக மூடிகளற்ற நிலையில் காணப்படுவதனால், பாதசாரிகள் மற்றும் வாகன சாரிகள் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காரைதீவு பிரதான வீதியின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த வடிகான்கள் நீண்டகாலமாகத் திறந்த நிலையில் காணப்படுவதுடன், தற்போதைய நிலையில் மண் மற்றும் குப்பைகள் அடைத்துச் சிதைவடைந்துள்ளன. இதனால், சிறிய அளவிலான மழை பெய்தாலும் கூட வடிகான்கள் வழியே நீர் வடிந்தோட முடியாமல், வீதிகளிலேயே வெள்ள நீர் தேங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இரவு வேளைகளில் இந்த வீதிகளூடாகப் பயணிக்கும் பாதசாரிகள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் மூடி இல்லாத இந்த வடிகான்களுக்குள் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அதேநேரம், வீதி ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும், திருப்புவதற்கும் வாகன சாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், வடிகான்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பிரதேசத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமும் அதிகரித்துள்ளது. இது குறித்துப் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, காரைதீவு பிரதான வீதியின் பராமரிப்புக்கு பொறுப்பான கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி, வடிகான்களைச் சுத்திகரித்து அவற்றுக்கு முறையான மூடிகளை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post: