திறைசேறியை நிரப்புவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களைப் போக்கவும் கவனம் செலுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (07)கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,
வாழ்க்கைச் செலவு நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். 3 வேளை உணவு உண்ண முடியாத குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பிள்ளைகளது கல்வி மற்றும் இதர செலவுகளை முன்னெடுக் முடியாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.
இதேவேளை திறைசேரியில் போதியளவு நிதி இருப்பதாக ஜனாதிபதியும், சில அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், பொதுமக்கள் அனுபவிக்கும் கஸ்டங்களை நிவர்த்திக்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
மக்களுக்காகத் தான் அரசாங்கம். பொதுமக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்குவதாகக் கூறித்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனவே, திறைசேரியில் நிதி சேர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது அவற்றை பொதுமக்கள் எதிர் நோக்கும் கஸ்டங்களைக் குறைக்கவும் பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமையானது பொதுமக்களது கஸ்டங்களை அவர்கள் கண்டு கொள்ள வில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
எனவே, ஜனாதிபதியும், அமைச்சர்களும் பொதுமக்கள் விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களது வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




