கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரெனப் பெய்த கடும் மழை காரணமாக தலைநகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் சில மணி நேரத்திற்குள் 129 மில்லிமீற்றர் வரை கொட்டித் தீர்த்த கனமழையால் கொழும்பு மாநகரின் முக்கிய வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் பல வீதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய கொழும்பில் அமைந்துள்ள பிரபல ‘பீப்புள்ஸ் பார்க்’ (People’s Park) வணிக வளாகத் தொகுதிக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அங்கிருந்த பல வர்த்தக நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீர் வெள்ளப்பெருக்கால் வர்த்தகர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் கடும் அசௌகரிய நிலைமை நிலவி வருகின்றது.






