யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி என்ற 19 வயதுடைய இளம் பெண், சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக நேற்று (20) தவறான முடிவெடுத்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே இவர்களது திருமணம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இவர்களது காதரையோ அல்லது திருமணத்தையோ கணவனின் தாயார் (மாமியார்) ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தபோதிலும், கணவரின் தாயார் தொடர்ந்து 25 பவுண் தங்க நகையையும், ஒரு வீட்டையும் சீதனமாகக் கேட்டு அந்தப் பெண்ணை மனரீதியாகக் கடும் நச்சரிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
இதற்கிடையில், கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு ஜென்ஸி மறுப்புத் தெரிவித்துள்ளார். எனினும், “தனது தாயார் கேட்ட சீதனத்தைத் தராவிட்டால், நான் உன்னை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிடுவேன்” என கணவர் கூறியுள்ளார். இதனால் கடுமையான மன விரக்திக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளான அந்த இளம் பெண் நேற்று காலை இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான சடலம் மீதான மரண விசாரணைகளை, யாழ்ப்பாணப் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட போதிலும், மலையகம் முதல் யாழ்ப்பாணம் வரை சமூகத்தைப் பிடித்துள்ள இந்தச் ‘சீதனப் பேய்’ இன்னும் எத்தனை இளம் பெண்களின் உயிர்களைப் பறிக்கப் போகிறது எனச் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.




