• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • பதுளை மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு 

பதுளை மாவட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு 

 ஹஸ்பர் ஏ எச் 

2026 செப்டம்பர் இன்று(29)  பதுளை மாவட்டம் அழகொல்ல தோட்டத்தில் 51 புதிய வீடமைப்புப் பிரிவுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் உதவித் தூதர்  சரண்யா வி. எஸ். அவர்களுடன், இலங்கையின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  கே.வி. சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ பிரதீப் சுந்தரலிங்கம் ஆகியோர் இணைந்து அடிக்கல்லை நாட்டினர்.

இந்த வீடுகள், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (Indian Housing Project – IHP) நான்காம் கட்டத்தின் இரண்டாம் நிலையின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன. இதன் நான்காம் கட்டம், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் 2025 அக்டோபர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டத்தின் கீழ், இலங்கையின் ஆறு மாகாணங்களில் பெருந்தோட்ட சமூகத்திற்காக 10,000 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்திய வீடமைப்புத் திட்டம் (IHP), இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் முக்கிய அபிவிருத்தித் திட்டமாகும். 18 பில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமான மானிய உதவியுடன் சுமார் 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. முதல் இரண்டு கட்டங்களின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட அல்லது புனரமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

 இந்திய வம்சாவளி தமிழ் சமூகமும், பெருந்தோட்டப் பகுதிகளும் இலங்கை–இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. வீடமைப்புக்கு அப்பால், டிக்கோயா பல்துறை சிறப்பு மருத்துவமனை நிர்மாணம், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல், ஒன்பது பெருந்தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துதல் மற்றும் சீதா எலிய ஆலயத்தின் அபிவிருத்திக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வந்ததன் 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, 2023 ஜூலை மாதம் இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களால் 750 மில்லியன் இந்திய ரூபாய் பெறுமதியான பல்துறை அபிவிருத்தி தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் (PHDT) பிரதிநிதிகள் மற்றும் அழகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share the Post: