யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களது படகு பழுதடைந்ததால் நேற்று (06) கடலில் மாயமாகியிருந்தனர். அவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாமல் போனதால் உறவினர்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.
இதனையடுத்து, கடல்தொழில் அமைச்சரின் அவசர வேண்டுகோளுக்கிணங்க இலங்கை கடற்படையினர் மற்றும் உள்ளூர் மீனவ சங்கங்கள் இணைந்து நடுக்கடலில் தீவிர கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன் பயனாக, மாயமான புங்குடுதீவு மீனவர்கள் இன்று (07) கடற்படையினரால் நடுக்கடலில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிகட்டுவான் கடற்பரப்புக்கு அழைத்து வரப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பாக தங்களது குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டனர்.
மரணத்தின் விளிம்பு வரை சென்று, கடற்படையினரின் சாதுரியமான மீட்புப் பணியால் உயிர்தப்பி, மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ள மீனவர்களின் வருகை புங்குடுதீவு கிராம மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






