(கனகராஜா சரவணன்)
காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரி ஒருவரின் வீடு ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (6) பகல் முற்றுகையிட்ட பொலிசார் 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜையராஜாவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி வழி காட்டலில் சம்பவ தினமான நேற்று பகல் குறித்த வீட்டை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் சாஜன் இஹலகம, ஜயசிங்க, கொடிகார, டிகாசன், ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன் போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபாரியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 44 வயதுடையவர் எனவும் போதை பொருள் தொடர்பாக பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த துடன் நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தொடர்ந்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.




