புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி-06, A.L.S மாவத்தை அக்பர் பள்ளிவாயல் மஹல்லா மகளிருக்காக நடாத்தப்பட்ட 15 நாட்கள் கொண்ட “மார்க்கச் சட்ட விளக்க வகுப்பு” வெற்றிகரமாக நிறைவுபெற்று, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
அக்பர் பள்ளிவாயல் நிர்வாக சபை மற்றும் ஜாமிஅதுல் ஜமாலியா அரபுக் கல்லூரி உஸ்தாதுமார்களின் விஷேட பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட இவ்வகுப்புகள், பள்ளிவாயலின் பேஷ் இமாம் மௌலவி A.L.M. சஜாத் (பலாஹி) அவர்களின் நெறிப்படுத்தலில் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டிருந்தது.
இம்மார்க்க விளக்க வகுப்புகள் அனைத்தையும் ஜாமிஅதுல் ஜமாலியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி M.L.M. ஸப்ராஸ் (பஹ்ஜி – அஷ்அரி) அவர்கள் முழுமையாக நடாத்தி வைத்திருந்தார். மகளிருக்கு அவசியமான மார்க்கச் சட்டங்கள் மற்றும் அன்றாட வாழ்வியல் வழிகாட்டல்கள் குறித்து இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
வகுப்புகளின் இறுதியில் இடம்பெற்ற பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (2026.05.08) அக்பர் பள்ளிவாயலின் கௌரவத் தலைவர் A.L.M. றிஸ்வி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டோர்:
- அக்பர் பள்ளிவாயல் நிர்வாகிகள்.
- ஏனைய பள்ளிவாயல்களின் பேஷ் இமாம்கள்.
- அரபு மத்ரஸாக்களின் அதிபர்கள் மற்றும் உஸ்தாதுமார்கள்.
- சான்றிதழ் பெறும் மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள்.
மிகவும் எழுச்சியாக நடைபெற்ற இந் நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









