பாறுக் ஷிஹான்
4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன்
சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சம்மாந்துறைப் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை திங்கட்கிழமை(5) இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வீதி ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது குறித்த சந்தேக நபரான இளைஞனின் உடமையிலிருந்து 4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்வாறு கைதானவர் சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் என்பதுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.





