சுற்றுலா நகரமான நுவரெலியாவில், அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் (ரூ. 500,000) பாரிய அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
வெறும் 30 ரூபாய் மேலதிக லாபத்தைப் பெறுவதற்காக, வாடிக்கையாளர்களை ஏமாற்றி விதிகளுக்கு முரணாகச் செயற்பட்ட கடை ஒன்றுக்கே இந்த அதிரடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள குறிப்பிட்ட கடையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குப் (CAA) பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் நுவரெலியா மாவட்டக் கிளையின் அதிகாரிகள் குறித்த கடைக்குச் சென்று அதிரடிச் சுற்றிவளைப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 30 ரூபாய் அதிகமாக வைத்து ஒரு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கடை உரிமையாளருக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நுகர்வோரைச் சுரண்டும் வர்த்தகர்களுக்குப் பாடமாக அமையும் வகையில் நீதவான் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

இதேவேளை, அரிசியை அதிக விலைக்கு விற்ற மற்றொரு வர்த்தகருக்கும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளையும் நுகர்வோரையும் ஏமாற்றும் நோக்கில் அத்தியாவசியப் பொருட்களுக்குச் செயற்கையாக விலை உயர்வு செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய நாடு தழுவிய ரீதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அதன் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) சரிபார்த்து வாங்குமாறும், முறைகேடுகள் எதேனும் இருப்பின் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறையிடுமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.




