யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறை பெண் விரிவுரையாளர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இக்கொலை தொடர்பான திடுக்கிடும் பின்னணித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் மகன் அண்மையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்தே இக்கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முறைப்பாட்டையடுத்து, விரிவுரையாளரின் பாசையூரிலுள்ள (பாண்டியன்தாழ்வு) வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது வீட்டின் கூரை ஓடுகள் கழற்றப்பட்டிருந்ததும், கொலையாளிகள் கயிறு மூலம் உள்ளே நுழைந்து பின்னர் வெளியேறியதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. அத்துடன், வீட்டிற்குள் வெட்டப்பட்ட நிலையில் தலைமுடியும், கயிறுகளும் பொலிஸாரால் சான்றுகளாகக் கைப்பற்றப்பட்டன.
பொலிஸாரின் தீவிர விசாரணைகளின் போது, விரிவுரையாளரின் மகளுக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளமை தெரியவந்தது. இந்த விவாகரத்துப் பிரச்சினை மற்றும் குடும்பத் தகராறு காரணமாகவே இந்த உன்னத விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய 21 வயதுடைய மருமகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 19 வயதுடைய விரிவுரையாளரின் மகள் (வழக்கு நிலுவையில் உள்ள கணவனின் தரப்பிற்கு உதவியதாகக் கூறப்படும் நபர்) ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையைச் செய்த பின்னர் சந்தேகநபர்கள் ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் பணம் எடுத்தமை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கார்ட் (QR Code) மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் ஊடாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பொலிஸார் கொலையாளிகளை மிக விரைவாகக் கண்டறிந்துள்ளனர்.
கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் சடலத்தை, கொலையாளிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று வீசியுள்ளதாக விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளனர். சடலம் வீசப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு, அதனை மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தையும், பொதுமக்களையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள் தமது பலத்த கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.




