பொலன்னறுவை தேசிய சிறுநீரக சிறப்பு வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26) அதிகாலை 4:30 மணியளவில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் வைத்தியசாலை ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தின் போது சமையலறைப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலையின் சமையலறை மற்றும் கட்டிடப் பகுதிக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுக் கசிவு காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய பொலன்னறுவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






